Wednesday 30 March 2016

4. தேவாரம் பாடினால்தான் இசையின் முழுவீச்சும் அத்துப்படியாகும்…!


அண்ணாமலை மன்றத்தில் வருடந்தோறும் நடைபெறும் பண்ணாராய்ச்சி ஆய்வரங்கம். அதில் அந்த ஆண்டு இசைப்பேரறிஞர் பட்டம் பெற்ற திரு.டி.என். சேஷகோபாலன் அவர்கள் மரபு காரணமாகத் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார். சாளரப் பண் எது என்பது பற்றி ஆய்வு நடந்து கொண்டிருந்தது என்று நினைக்கின்றேன்.

ஆய்வரங்கில் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கியவர்கள் எல்லாம் பெரிய பெரிய இசை வல்லுநர்கள் மற்றும் ஓதுவாமூர்த்திகள். எல்லொரும் தமது கருத்துக்களைக் கூறும்போது மிகக் கவனமாக தருமபுரத்தார் என்ன நினைப்பாரோ என்று அவரைப் பார்த்தே பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரம்.

தலைவர் பொறுப்பில் அமர்ந்திருந்த நாடறிந்த இசைவிற்பன்னர் திரு.டி.என்.சேஷகோபாலன் அவர்கள் தமது கருத்தை எடுத்துச் சொல்லிவிட்டு அது முழுமையாக ஏற்கத்தக்கதா என்பதை தேவார சிங்கம் தருமபுரம் சுவாமிநாதன் அவர்கள்தான் சொல்லவேண்டும் என்று அவர் முன் பேச அஞ்சி அஞ்சிக் கூறியது இன்னும் என் கண்முன் விரிகிறது.

உடனே அது இப்படித்தான் அமையவேண்டும் என்று பாடிக்காட்டி கர்நாடக இசை விற்பன்னரான தலைவர் முன் அதற்கு சுரக்கோர்வையும் பாடி அமைந்தபோது அரங்கே அதிர்ந்தது.

தலைவர் பொறுப்பில் இருந்த  திரு.டி.என். சேஷகோபாலன் அவர்கள், கர்நாடக இசையை எல்லாம் பயின்றபின் அவரது தந்தையார் தேவார, திவ்வியப் பிரபந்தப் பண்களைப் பாடிப் பழகினால்தான் இசையின் முழுவீச்சும் உனக்கு அத்துப்படியாகும் என்று சொன்னதாகவும் இப்போது தேவார சிங்கம் தருமபுரம் சுவாமிநாதன் பாடிக்காட்டியபோது அதன் உண்மையை உளப்பூர்வமாக உணர்ந்ததாகவும்கூறியபோது மீண்டும் அரங்கு அதிர்ந்தது.

ஆ! தமிழிசை வென்றது என்று தாளம் போட்டுக் கூத்தாடினேன். உண்மையில் வழக்கமாக திரு.டி.என். சேஷகோபாலன் அவர்கள் பாடுவதை மெய்ம்மறந்து ரசித்துக் கேட்பவன் நான். அன்று அவர் பேசுவதைக் கேட்டு மெய்ம்மறந்து போனேன். ( - செந்தமிழ் வேள்விச்சதுரர் Dr.மு.பெ.சத்தியவேல் முருகனார் கூறியது)